காய்கறிகளின் விலையேற்றம் காரணமாக இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் குறித்த புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025 டிசம்பர் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 1.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நவம்பர் மாதத்தில் 0.71 சதவீதமாக இருந்தது. மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவுப் பொருட்களின் விலை வீழ்ச்சி வேகம் குறைந்ததே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை ஆண்டுக்கு 2.71 சதவீதமாகக் குறைந்துள்ளது. நவம்பர் மாதத்தில் இது 3.91 சதவீதமாக இருந்தது.
இந்த உணவுப் பணவீக்கக் குறைவுதான் ஒட்டுமொத்த பணவீக்கம் உயர முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. காய்கறி விலை கள் தொடர்ந்து குறைந்தாலும், அதன் வேகம் குறைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் காய்கறி விலை ஆண்டுக்கு 18.47 சதவீதம் குறைந்துள்ளது. நவம்பர் மாதத்தில் இது 22.20 சதவீதமாகக் இருந்தது. இந்த குறைந்த பணவீக்க சூழல் மற்றும் வலுவான பொருளாதார வளர்ச்சி காரணமாக, ரிசர்வ் வங்கி கடந்த மாதம் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. பணவீக்கம் இன்னும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்பு அளவை விடக் குறைவாக இருப்பதால், மற்றொரு வட்டி விகிதக் குறைப்புக்கான எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன.